சண்முகம் தவசீலன்
2026.11.08
இருளை அகற்றி ஒளியை ஏற்றும் தீபாவளி, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் மலரச் செய்யட்டும்” – சத்தியலிங்கம் எம்.பி…!
“இருளை அகற்றி ஒளியை ஏற்றும் தீபாவளி, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் மலரச் செய்யட்டும்” தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்து உறவுகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.என பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்
தீபாவளி திருநாளை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் மட்டுமல்ல; தீமையை வென்று நன்மையை நிலைநாட்டுதல், அறியாமையை அகற்றி அறிவொளியைப் பரப்புதல், வெறுப்பைக் களைந்து அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல் ஆகிய உயரிய தத்துவங்களை எமக்கு உணர்த்தும் உன்னதமான பண்டிகையாகும்.
இன்றைய சூழலில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சமூகச் சவால்களுக்கு மத்தியில் வாழும் எமது மக்கள் அனைவரினதும் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர வேண்டும். சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் வலுப்பெற்று, அனைவரும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தத் திருநாள் உந்துசக்தியாக அமைய வேண்டும்.
எமது மக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் நீங்கி, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, இளைய தலைமுறையினருக்கு வளமான எதிர்காலம் உருவாக வேண்டும் என இந்நன்னாளில் பிரார்த்திக்கின்றேன்.
இந்தத் தீபாவளித் திருநாள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியையும், மனங்களில் அமைதியையும், வாழ்வில் வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும்.
இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயமும் நல்லிணக்கமும் மேலோங்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது


