மன்னாரில் 16 பாடசாலை மாணவர்களுக்கு தேசிய மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம்

வாஸ் கூஞ்ஞ) 03.11.2026

பாதுகாப்பான சிறுவர்கள்-  வலுவான மாணவர் தலைமைத்துவம்-  ஆரோக்கியமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னுறித்தி மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்- சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு- உளநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் மன்னாரில் நடைபெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தேசிய மாணவர் தூதுவர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இத்திட்டமானது மன்.ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க் கிழமை (03.11) நடைபெற்றது.

மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்- சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு- உளநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் தூதுவர் இந்த பயிற்சித் திட்டத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்கள்- அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பயிற்சித் திட்டத்தில் சிறுவர் உரிமைகள்- சிறுவர் பாதுகாப்பு- துஷ்பிரயோகத் தடுப்பு- உளநலம்- உணர்ச்சி நல்வாழ்வு- தலைமைத்துவம்- தொடர்பாடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளவாளர்களால் இப்பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்வி- சுகாதாரம்- உளசமூக சேவை- நன்னடத்தை- சிறுவர் பாதுகாப்பு போன்றவையும் பொலிஸ் துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை மன்னார் மாவட்டச் செயலக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. எஸ்.ஐ.பெர்னான்டோ மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் திரு. தர்மகுலசிங்கம் சிவனந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்.

பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தி பொறுப்புமிக்க மாணவர் தலைவர்களை உருவாக்கும் முக்கியமான முன்னெடுப்பாக இப்பயிற்சித் திட்டம் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.