சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்

நூருல் ஹுதா உமர்

இலங்கையில் பெரும்பான்மை அரசியல் சக்திகளுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சமூக ஒற்றுமை மிகவும் அவசியமானதாகும். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சாதனையாளர் கௌரவிப்பு விழா காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.