36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தியகமவில்

சண்முகம் தவசீலன்
2026.11.01
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முந்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து 36 வது முறையாகவும் ஏற்பாடு செய்திருக்கும் இவ்விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இலங்கை பாராளுமன்றத்தின் அவைத்தலைவரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மற்றும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சர் சுனில்குமார கமகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

அதேவேளை இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜேரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 26 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2500 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்குப்பற்றலுடன் இவ் ஆரம்பநிகழ்வு நடைபெற்றது.

இவ் ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து இவ் விளையாட்டு விழாவில் முதலாவது போட்டி நிகழ்வான ஆண்களுக்கான 10000M ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் காலி மாவட்டத்தை சேர்ந்த D. P. S. S. சேனாநாயக்க 33:11.6 நிமிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்று க்கொண்டார்

இரண்டாம் இடத்தினை கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட டைட்டன்ஸ் இளைஞர் கழகத்தின் R. யதீஷன் 33:12.3 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் மூன்றாம் இடத்தினை களுத்துறை மாவட்டத்தின் M. S. மொஹமட் 33:48.7 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கல பதக்கத்தினை பெற்றுக் கொண்டனர்

தொடர்ந்து நேற்று (31) மற்றும் இன்று (01) ம் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது