அம்பாறை மாவட்டத்தில் 330 பேருக்கு NVQ தொழில் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகளையும் கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்த 330 பேருக்கு NVQ தொழில் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27.10.2026) சாய்ந்தமருதில் நடைபெற்றது.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பீ.எம். நளீம் தலைமையில், சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் விஜித வீரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பயிற்சிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கு NVQ தொழில் தகைமைச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பணிப்பாளர் சந்தன விதான பத்திரன, திட்டமிடல் மற்றும் தொழில் ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஏ. முகம்மட் ஜாபிர், பரீட்சைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் திரு கனகசுந்தரம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன், தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பயிலுநர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகளை உறுதிப்படுத்துவதில் NVQ சான்றிதழ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய தொழிற்பயிற்சித் திட்டங்கள் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கின்றன.

தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சியின் ஊடாக திறமையான மனிதவளத்தை உருவாக்கி, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதே இவ்வாறான பயிற்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.