நூருல் ஹுதா உமர்
பலமுனை கமு/அக்/மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக அணுகல் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி யு.எல். மில்ஹானாவின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கணினி விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.எம்.எம். மன்சூர் வளவாளராகக் கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், அதன் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அதனைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
உயர்தர மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதையும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதலை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


