கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பு முகாமைத்துவக் குழு புதிய அலுவலகம் திறப்பு

நூருல் ஹுதா உமர்

கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பு முகாமைத்துவக் குழு புதிய அலுவலகத் திறப்பு விழாவும் பொதுக்கூட்டமும் பொதுமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கல்முனை பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். மஜீத், தாருஷபா ஸ்ரீலங்கா பிரதானி ஏ.ஆர். சஃபா முஹம்மது (நஜாஹி முகத்தமுல் காதிரி), கல்முனை மைமூனா மகளிர் அரபுக் கல்லூரித் தலைவர் மற்றும் முகாமையாளர் எம்.எம். நௌசாத், பிரஜாசக்தி தலைவர், கிராம சேவகர் ஏ. கியாஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம் பாவா உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, கடந்த நான்கு மாதங்களுக்கான வரவு–செலவுக் கணக்கறிக்கை பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் தனித்தனியாகக் கணக்கறிக்கை வழங்கப்பட்டது. இந்நடவடிக்கை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் நிதி நிர்வாகத்தில் பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூறும் நடைமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

புதிய அலுவலகத் திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்தின் ஊடாக குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.