இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகஸ்ட் 5ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வமான அரைநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய நலன் சார்ந்த பல விவகாரங்களை முதன்மைப்படுத்தியதாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைறேவற்றுதல், இலங்கை அரசியலைமப்பின் 13ஆவது திருத்தித்தினை முழுமையாக அமுல்படுத்தல், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகிய விடயங்கள் முக்கியம் பெற்றிருக்கின்றன.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்தியா அவரை இலக்கு வைத்துவிட்டது. இருந்தாலும், ஜனாதிபதியானதும் அவருடைய முதலாவது விஜயம் இந்தியாவுக்கானதாக இருந்தது. இந்த விஜயத்தின் போது தமிழ் மக்களுடைய விடயங்கள், 13ஆவதுதிருத்தம் தொடர்பில் பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்தியப் பிரதமர் ஏன் இவ்வாறு இலங்கைத் தமிழர்களை மறந்தார் என்றெல்லாம் கருத்துக் கணைகள் பறந்து கொண்டிருந்தன. ஆனால், அந்த
விமர்சனங்களுக்கு இந்தியப் பிரதமரோ இலங்கை அரசாங்கமோ சரியான பதில்
எதனையும் கொடுக்கவில்லை.
உண்மையில் தலைவர்களின் சந்திப்புக்கள், இராஜதந்திரிகளின் சந்திப்புக்களின் ஒழுங்குகளில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டாலும், உடன்பாடுகள் காணப்படுகின்ற விடயங்கள் மாத்திரமே வெளியே விடப்படுவது ஒரு மரபாகும். அந்தவகையில் இந்தியாவுக்கான அனுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தின் போது மாகாண சபை விவகாரம் 13ஆவது திருத்தம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தாலும் உடன்பாடு எட்டப்படாமையினால் அறிக்கைகளில் உள்வாங்காது விடப்பட்டிருக்கலாம். அதில் முக்கியமாக இந்தியாவின் பிரதமரால் கேட்கப்பட்ட விடயம் இலங்கையால் மறுக்கப்பட்டது என்பதாக தகவல்கள் வெளிவருவதனை இந்தியா விரும்பியிருக்காது.
அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மாகாணசபைத் தேர்தலை
நடத்துதல் தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக
இலங்கை அரசாங்கத்திற்கான அழுத்தங்கள் இந்தியாவால் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
அந்தவகையில், கடந்த வாரத்தில் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்
குறித்து கலந்துரையாடியிருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை
வலியுறுத்தியிருக்கிறார். இது இலங்கை அரசாங்கத்தின் கால இழுத்தடிப்பிற்கு
ஒரு முற்றுப் புள்ளியை வைக்கும் என்று நம்புவோம்.
இந்த அவசர அரைநாள் விஜயத்திற்கும் விஜயம் ஏற்படுவதற்குமான அவசரம்
மற்றும் ஏதுக்கள் பற்றிப் பார்ப்போமானால், இதுவரையில் இல்லாதிருந்த
சிறுபான்மைத் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை காரணமாக அமைந்திருக்கலாம்.
இந்தியா எதிர்பார்க்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் கட்சிகளின் ஒற்றுமையான
உந்துதலானது விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று இந்தியா
இலங்கையைக் கோருவதற்குக் காரணமாக அமைந்திருக்கும் என்ற கருத்தை பலரும்
ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். இருந்தாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமாக
அமையலாம். தனியாக ஒரு பணயத்தினை இதுவரையில் மேற்கொண்டிருக்காத இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஏன் இப்போது வந்தார் என்ற
கேள்வியைக் கேட்டால், ஆராய்ந்தால் நிச்சயமாக இது தெளிவாகும்.
இலங்கை அரசாங்கம் திணிக்க முயலும் உள்ளகப் பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை. சர்வதேசப் பொறிமுறையின் ஊடாகவே நீதியைப் பெற்றாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு சிறிதளவில் கூட தங்களது சுயநிர்ணய உரிமை சார்ந்த விவகாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை. கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமலிருந்துவருகின்ற மாகாண சபைத் தேர்தலானது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கின்றது. இது தற்போதைய அரசாங்க
காலத்தில் உருவான பிரச்சினையல்ல. இருந்தாலும், வெளிவிவகாரத்துறை அமைச்சர்
விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி இத் தேர்தலை பழைய
முறையிலா, புதிய முறையிலா நடத்துவது என்பது குறித்து கூடி ஆராய்வதற்காக
குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக்குழு இதுவரையில் அறிக்கையினைச்
சமர்ப்பிக்கவில்லை. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், ஜூன் மாதத்துக்கு
முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை
நடத்தப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும்
என்றும் தகவல் கசியவிடப்பட்டது. ஆயினும் இதுவரையில் எந்த முடிவும்
கிடைக்கவில்லை. அதற்கு மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு
சரிந்துவரும் ஆதரவு காரணம் என்று ஒரு பேச்சும் இருக்கிறது. எது
எவ்வாறானாலும், மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு
விரைவாக தீர்வு காண்பது அரசாங்கத்திற்கு கட்டாயமாகியிருக்கிறது என்பதே
உண்மை.
சுயநிர்ணயக் கோரிக்கையுடன் தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின்
விளைவாக இந்தியா 1987களில் உள்நுழைந்து 13ஆவது திருத்தச் சட்டத்தின் உருவாக்கத்திற்கும் மாகாண சபை முறைமைகளுக்கும் காரணமாக இருந்தது. வடக்கும் கிழக்கும் இணைந்த சபையாக இருந்த போதிலும் ஏனைய மாகாணங்கள்
தனித்தனியாக இயங்கிவந்தன. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988ஆம் ஆண்டில் முதலாவது
தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தார். அதன் பின்னர் ஆளுநர்களின் அதிகாரத்திலேயே இம் மாகாண சபை இயங்கிவந்தது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒன்பது மாகாண சபைகளில் வடக்கும் கிழக்கும் இணைந்ததாகவே கட்டமைக்கப்பட்டிருந்தாலும், 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்தன. இந்தப் பிரிப்பு இனி சேர்ப்புக்கு வழியில்லை என்பை நிச்சயப்படுத்தியிருக்கிறது. இப்போது தமிழர்களுக்கு மிஞ்சியிருப்பது வடக்கு, கிழக்கு என்ற இரு மாகாணங்கள் மாத்திரமே. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்காக நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. இப்போது பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே காலங்கடக்கிறது. வட கிழக்குத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாக பல தசாப்தங்களாக போராடி வருகின்ற தமிழர்கள் பயன் பெற்றதனைவிடவும் ஏனைய மாகாணங்கள் பயனடைந்ததே அதிகமாகும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினை வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினை, கல்வி சார்ந்த பிரச்சினை என்ற கோணத்தில் திசை திருப்பி சுயநிர்ணய உரிமைகளை அடைந்து கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்துவதே காலம் காலமாக நடைபெற்று வந்திருக்கிறது. இலங்கையின் கடந்த கால ஜனாதிபதிகள், அரசாங்கங்கள் தமிழ் மக்களது இனப்பிரச்சினையையும் சுயநிர்ணயக் கோரிக்கையையும் கையாண்ட விதம் நகைப்புக்குரியதாகவே இருந்தாலும் தமிழ் மக்கள் அதனைச் சாதாரணமாகவே கடந்து வந்திருக்கின்றனர். அமைதி, ஆகிம்சை,ஆயுதம் என்றாகி அது கொடூரமாக அடக்கப்பட்டு இப்போது அதிகாரத்துக்காக கையேந்தும் நிலையில் இருக்கிறது என்பதுதான் ஜதார்த்தம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்றாகவேண்டும் என்ற உலக ஜதார்த்தத்தையொட்டிய முயற்சிகளில் ஒன்றுதான் மாகாண சபைத் தேர்தலுக்கான முயற்சியாக இருக்கிறது. அந்தவகையில் இப்போதுள்ள இலங்கையின் அரசியல் நிலைமையில், மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்துமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எடுத்தற்கெல்லாம் குழுக்களை உருவாக்கும் அரசாங்கத்தால் ஏன் மாகாண சபை
முறைமை குறித்து ஒரு முடிவை எடுக்கமுடியாமலிருக்கிறது. ஊழலுக்கெதிரான சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக சட்டம் என நகரும் அரசுக்கு தேர்தல் குறித்து முடிவை எடுக்க முடியவில்லையா? என்றும் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. எதுஎவ்வாறானாலும், இந்தியா தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகிக்க தொடங்கிவிட்டது என்பதற்கான மீள் சமிக்ஞையான இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் விஜயம் கொண்டுவந்த செய்தியை இலங்கையின் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகப் புரிந்து கொண்டு பதிலைச் செயற்பாடாக்கினால் சிறப்பே. அப்படியானால் விரைவில் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம்!
லக்ஸ்மன்
10.08.2026


