கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் ஐந்து நாட்களாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது.
முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் தலைமையில் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் ஒழுங்கமைப்பில் இப் பெருவிழா நடைபெற்றது.
நான்காம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்எல்எம்.ஹனிபா, தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் சஞ்சீவி சிவகுமார், சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் பளீல் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ், முஸ்லிம் பாரம்பரியக் கலைக் கலாசார நிகழ்வுகள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம், பக்தர் கலை, சீனடி உள்ளிட்ட தமிழர் முஸ்லீம்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று 09 ஆம் திகதி சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இதேவேளை அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த கிழக்கின் கலைச் சங்கமம் ஏலவே நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.





