மட்டக்களப்பு நாவற்குடாவில் யோகா அடிப்படை ஆறு மாத சான்றிதழ் கற்கைநெறி நிறைவு வைபவம்

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட யோகா அடிப்படை ஆறு மாத சான்றிதழ் கற்கைநெறியின் நிறைவு வைபவம் நாவற்குடா கலாசார மண்டபத்தில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாவற்குடா இந்து கலாசார நிலையப் பொறுப்பாளர் யோகநாதன் சுதேசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, யோகா பயிற்சியாளர் அழகு ஜெயதரன் நெறியாள்கை வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் 8 வயது முதல் 70 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என மொத்தம் 31 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இக்கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்கள், கொழும்பு யோகா சங்கமம் 2026 ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில், கொழும்பு காட்சி கலைகள் மற்றும் நிகழ்த்து கலைகள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட யோகா சங்கம நிகழ்விலும் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்பயிற்சி நெறியின் கீழ் 5 தொகுதிகள் உருவாக்கப்பட்டு, சுமார் 125-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிற்சியினைப் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களில் பாடசாலை ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்துறைகளைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

நவீன காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருந்தும், மன அழுத்தங்களில் இருந்தும் (குறிப்பாக தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகளில் இருந்து) விடுபட யோகாசனம் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை கலந்துகொண்ட மாணவர்கள் தமது அனுபவங்கள் மூலமாகப் பகிர்ந்துகொண்டனர். மேலும், நாடி சுத்தி மற்றும் ஆழமான சுவாசப் பயிற்சிகள் போன்ற நுட்பமான யோகா முறைகள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்து கலாசார அமைச்சின் அனுசரணையுடன் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்ட இப்பயிற்சி நெறி, தங்களுக்கு உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், சமுதாயத்தில் தம்மைக் தைரியமாக வெளிப்படுத்தும் சிறந்த ஆளுமையையும் வழங்கியுள்ளதாகப் பயனாளிகள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதன் போது யோகா மாணவர்களினால் யோகா பயிற்றுவிப்பாளர் அழகு ஜெயகரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.