உலகில் வேட்டி வாலாமணி சால்வையுடன்  பட்டங்களை வழங்கிய ஒரே வேந்தர் என்றால் அது பேராசிரியர் மௌனகுரு அவர்கள்தான்!

வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா வரலாறு படைத்திருக்கிறது.
கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமாகி 07 கட்டங்களாக நடந்து 05 ஆம் திகதி இனிதே நிறைவடைந்தது.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அம்சங்களுடன் மேளம் நாதஸ்வரம் இசைக்க மங்கள பேரிகைகள் முழங்க வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது.
அந்த மூன்று நாட்களும் அவ்வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பட்டதாரிகள் பெற்றோர்கள் கல்வியியலார்கள் பல்கலைக்கழக உயரதிகாரிகள் என வளாகம் நிரம்பி களைகட்டியிருந்தது.
84 வயதுடைய புதிய வேந்தர் ஓய்வுநிலைபேராசிரியர் சின்னையா மௌனகுரு ஒரு வரலாறு படைத்துள்ளார்.
உலகில் பாரம்பரிய கலாச்சார வேட்டி வாலாமணி பச்சைநிற கரையுடன் கூடிய சால்வை அணிந்து அனைவரையும் கைகூப்பி வரவேற்று 2369 பேருக்கும் பட்டங்களை வழங்கிய வரலாறு வேந்தர் பேராசிரியர் மௌனகுரு அவர்களையே சாரும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன சிறப்பு பேராளராக கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டபத்தில் முதன் முறையாக நடைபெற்றது.
இதுவும் ஒரு வரலாறு.
வடக்கு கிழக்கில் எங்குமே இல்லாத 1000 இருக்கைகள் உள்ள குறித்த மண்டபத்தில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் பொதுப் பட்டமளிப்பு விழா இதுவாகும்.
3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சகல பீடங்களையும் சேர்ந்த 2369 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.