சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் இன்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத்தின் ஒருங்கிணைப்பில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளமொன்றில் முஹம்மது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டமையின் காரணமாகவே சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசாவிற்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் கீழ் நீதிமன்றம் ஒன்றினால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மாற்றி மரண தண்டனையை விதித்தது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் அடங்குவர்.
மேலும், ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகப் பிரதிநிதி நீதிபதி எம்.டீ. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


