ஊடகவியலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி செயலமர்வு

(ஷினா)

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து, ஊடகப் பணியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒருநாள் பயிற்சி செயலமர்வு அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் (28) நடைபெற்றது.

Range View Srilanka மற்றும் Curve Up Foundation ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி செயலமர்வானது, “AI for All – One-Day Workshop for Media Professionals” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இப்பயிற்சி செயலமர்வில் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர். காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சி செயலமர்வு நடைபெற்றது. பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவை நடைமுறை ரீதியாகப் பயன்படுத்துதல், AI மூலம் உள்ளடக்கங்களை உருவாக்குதல், செய்திகளைத் தொகுத்தல் மற்றும் திருத்துதல், AI அடிப்படையில் காணொளி உருவாக்கம், சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் போது வளவாளர் ஏ.வினோத் தலைமையில் நடைபெற்ற அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதுடன், ஊடகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறை அனுபவங்களும் பகிரப்பட்டது.

Range View Srilanka நிதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.தல்ஹா தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த பயிற்சி செயலமர்வுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய ஏ.பி. எம்.எச்.கோல்டிங் நிறுவனத்தின் தவிசாளர் ஜனாப் மனாறுல் ஹுதா, st. Judy paramedical college நிறுவனத்தின் பணிப்பாளர் சப்ராஸ் மன்சூர் ஆகியோர் விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்ததுடன் நிகழ்வின் போது இவர்களின் சமூக பணியை பாராட்டி அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் தமீம், ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஜனாப் டிஸ்மத், Range View Srilanka கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எம். மனாஸ் உட்பட அனுசரணையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.