எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மக்கள் மத்தியில் சமூக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, தற்சமயம் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். உண்மையில் இது முறைமையில் மாற்றமா என்றும் கேள்வியெழுப்புகிறேன். நிறைவேற்று அதிகாரமானது நாட்டின் நீதிமன்றத்தை தனது அடிமையாகவும், ஏவல் ஆளாகவும் மாற்றிக் கொண்டு, ஜனநாயகத்தை நாசம் செய்து நீதிமன்ற சுதந்திரத்திற்கு அழுத்தம் செலுத்தி, கனம் நீதிபதிகள் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து, சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் செய்வதும் தான் உங்களது முறைமையில் மாற்றமா என்றும் கேள்வி எழுப்புகிறேன். இந்த முறைமையில் மாற்றமானது ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கியே நகர்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மனித மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஜனநாயகக் கட்டமைப்பில் காணப்படும் நிறுவனங்களை சீர்குலைத்து, தனிக் கட்சி நாட்டை ஆளும் முறைமையின் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றனர். இந்தச் செயற்பாடு நாட்டின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும். ஜனநாயகத்தின் கொலையாளிகளாக இந்த அரசும் ஜனாதிபதியும் வரலாற்றில் பதிவாவார்கள். ஜனநாயகத்தைக் கொல்வதற்கான Patent உரிமமும் இந்த அரசுக்கே கிடைக்கும். இந்தளவுக்கு மிகவும் அநாகரிகமான முறையில் நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஜனநாயக நிறுவனங்கள், அதிகாரப் பகிர்வு மற்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் மத்தியிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை பாழாக்கும் இந்த 22 ஆவது திருத்தமானது, அரசாங்கம் வாக்களித்த முறைமையின் மாற்றம் அல்லவென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் உண்மையான யதார்த்தத்தை அறிய மக்கள் மத்தியில் செல்லுங்கள்.
நாட்டிற்குப் பொறுப்புக்கூறும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் புதிய ஜனநாயக முறையையே அரசாங்கம் வாக்குறுதியளித்தது. பிட்ச் ரேட்டிங் (Fitch Ratings), Standard & Poor’s – S&P), Moody’s போன்ற நிறுவனங்களின் தரப்படுத்தல்கள் சிறந்தது என அரசாங்கம் கூறினாலும், விவசாயிகளைச் சந்தித்து இது தொடர்பான உண்மையான யதார்த்தத்தை அறிந்துகொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டமொன்று இல்லை.
நெல் கிலோ ஒன்றுக்கு இன்றும் கூட 150 ரூபா உத்தரவாத விலை இல்லை. முச்சக்கர வண்டிச் சாரதிகள், சுயதொழில் புரிவோர் மற்றும் தொழில்முயற்சியாளர்களிடம் இது குறித்து கேட்டுப் பாருங்கள். அரசாங்கம் தரப்படுத்தல்கள் பற்றிப் பேசினாலும் இன்று தொழில்துறையினர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். உள்நாட்டு போலவே பன்னாட்டு நிறுவனங்களும் தமது தொழிற்றுறைகளை இங்கு மூடிவிட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த ஏற்றுமதி சார்ந்த வேலைத்திட்டமும் அதற்கான சூழலும் இங்கு இல்லாமையே இதற்குக் காரணமாகும் என்று. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சாதாரண மக்களுக்காக வந்த அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கியுள்ளது.
ஒரு நபருக்கு வாழ்வதற்கு 17,315 ரூபா போதுமானது என்று அரசாங்கம் கூறுவது வெறும் ஏமாற்று வேலையாகும். அரசாங்கம் இவற்றின் அடிப்படையிலேயே அரச கொள்கைகளை வகுத்து வருகின்றது. இன்று உணவகத் துறையில் வேலை தேடும் இஸ்ரேல் செல்லவுள்ள 135 இளைஞர்கள் காணப்படுகின்றனர். 2025 பெப்ரவரி முதல் இவர்கள் குலுக்கல் முறைக்கு உட்படுத்தப்படாமல், இதுவரை காணப்பட்டு வந்த முறைகள் மாற்றப்பட்டு இவர்களினது அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்காக வந்த அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கியுள்ளது. இந்த அரசங்கம், 35 இலட்சத்துக்கு இஸ்ரேல் அனுப்பும் வேலைத்திட்டத்தையே ஊக்குவிக்கின்றது. இவர்கள் தற்சமயம் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முடியுமானால் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் யாரேனும் சென்று அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு நல்ல நிலையில் காணப்பட்டால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.
வீண் பெருமைப் பேச்சுகளை விடுத்து பிரச்சினைகளுக்குப் பதில்களை கொடுங்கள். அந்தக் கடமையை நிறைவேற்றத் தலைப்படுங்கள். அரசாங்கம் கூறுவது போல் மக்களுக்கும் நாட்டிற்கும் எல்லாம் நல்ல நிலையே காணப்பட்டால், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால், உடனடியாக மக்களின் கருத்தை அறிய மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன். தெரிவுக்குழுக்களை அமைத்து போலியான காரணங்களைக் கூறி மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
220 இலட்சம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட போதிலும் அரசாங்கத்திடம் அதற்கான பதில்கள் இல்லை. கேள்விகளைக் கேட்கும் போது அமைச்சர்கள் சிரிப்பதையே அறிவர். பொய்களைக் கூறி ஜனாதிபதி பதவியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மையையும் பெற்றுவிட்டு தற்சமயம் இந்த அரசாங்கம் சிரிக்கின்றது. அரசாங்கத்திற்கு தற்போது மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்கள் இல்லை. 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் கேலிக்கூத்தாகக் கருதுகின்றது. இப்போதேனும் அப்பட்டமான பொய்களைக் கூறுவதை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


