நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பிற்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளையும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தின் தவளம, நாகொட மற்றும் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த மற்றும் கங்க இஹல கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

நிலச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், மண் சரிவு, பாறைகள் சரிந்து வீழ்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.