பாகுபாட்டிற்கான கருவியாக மாதவிடாய் பயன்படக்கூடாது!

(சர்வதேச மாவிடாய் சுகாதார தினத்தினையொட்டிய கட்டுரை)

மாதவிடாய் தொடர்பான பாகுபாடு என்பது பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு பகுதியாகவே உணரப்படுகிறது.  இந்தப் பாகுபாடு சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் குறைவாகவும் அல்லது கண்ணுக்குத் தெரியாமலும் இருக்கிறது என்பதே வெளிப்படை. எந்தவொரு சாக்குப்போக்கிலும் பாகுபாடு காட்டும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது சகித்துக்கொள்ளவோ ​​முடியாது என்பதே உண்மை.

அந்தவகையில்தான், மாதவிடாயை கண்ணியம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த ஒரு விடயமாக நிலைநிறுத்துவதில் உறுதிப்பாடு அவசியமானது என்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில், அனைத்து பெண்கள், சிறுமிகள், கண்ணியமான மாதவிடாய் சூழலை அனுபவிக்கக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், மாதவிடாய் பாகுபாடு காரணமாக பெண்கள் உடல் பாலியல், அரசியல், பொருளாதார வன்முறைகளை எதிர்கொள்ளும் அதேவேளை வளங்களை அணுக முடியாததாலும் அதிக  இழப்புகளைச் சந்திப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சர்வதேச மாவிடாய் சுகாதார தினம் ஒவ்வொருவருடமும்  மே மாதம் 28ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது. “மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை” என்பதற்கிணங்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் மாதாந்தம் அனுபவிக்கும் மாதவிடாய் தொடர்பில் இன்னமும் சமூகத்தில் உரிய விழிப்புணர்வின்மையால் பாடசாலை மாணவிகள் தொடக்கம் வேலைத்தளங்களில் உள்ள பெண்கள் வரைக்கும்  மிகுந்த அவஸ்த்தைகளை எதிர்கொள்கின்றனர். ஓர் பெண் பூப்பெய்திய காலம் முதல் அவள் மாதாந்த மாதவிடாய்ச் சக்கரத்தின்பால் இயற்கையாகவே செயற்படத் தொடங்குகிறாள்.  ஆனால் குடும்பத்திலோ அவளது மாதவிடாய்க் காலங்களில் அவளுக்கான ஓய்வினை வழங்குவதோ அல்லது சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புக்களினை வழங்குவதோ மிக அரிது.

இது பெண்களுக்கு இயற்கையானது என்ற மெத்தனப் போக்கான சிந்தனையினால் குடும்பத்தினரிலிருந்து இந்த கவனமில்லாச் சிந்தனை ஆரம்பிக்கின்றது. அதன் விளைவுதான் இன்றும் பெண்கள் தமது பாடசாலைக் காலங்களில் பல தொற்றுகளுக்கு இலக்காவது ஓர் குழந்தைக்குத் தாயாக முற்படுகையில் அதன் விளைவு வரை அப்பெண் அனுபவிக்க நேரிடுகின்றது. இதனால் அவளது குடும்பமே மனவேதனையைச் சுமக்க நேரிடுகின்றது. குடும்பத்தில் உள்ளவர்கள் எப்பொழுது இந்த மாதவிடாய் பெண்களுக்கே உரியது என்ற மன நிலைமையிலிருந்து மாதவிடாயானது மதிக்கப்பட வேண்டிய ஓர் உடற்தொழிப்பாடு என்பதனை ஏற்கத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் மாண்புக்குரிய மாதவிடாய் (Dignified menstruation)  என்ற எண்ணக்கரு முழுமையாக செயற்பாட்டினை எட்டும்.

நாம் கல்வியில், சுகாதாரத்தில் பண்பாட்டில் சிறந்து விளங்குகின்றோம் என்று மார்தட்டும் எமது நாட்டிலே மிக அண்மைக்காலமாகப் பெண்கள் குழந்தை பெறும் நிலைமை குறைவடைந்து செல்வதனை அரசின் உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. இதற்கு முக்கியமாகப் பெண்களது உரிமைகள் சார்ந்து குரல் கொடுப்போரும் சுகாதாரத் துறையினரும் முன்வைக்கும் காரணங்களிலொன்றுதான், பெண் பிள்ளைகளை மாதவிடாய்க் காலங்களில் அவர்களது உணவு மற்றும் போஷாக்கு நிலைமைகளில் கவனஞ்செலுத்தாதது மட்டுமன்றி அவர்களது உள ஆரோக்கியத்தினையும் எமது சமூகம் பேணத் தவறியமையும் காரணம் என்கின்றனர்.

மாதவிடாய்க்காலங்களில் பெண் நாளாந்தம் தமது குடும்பப் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். காலையில் எழுவது முதல்  சமையல், பிள்ளை பராமரிப்பு, இதர குடும்ப அங்கத்தவரர்களைக் கவனிப்பது, பாடசாலை செல்லும் மாணவியாயின் நாளாந்த கடமைகளைத் தவறாது செய்வது எனப் பம்பரமாகக் சுழலும் நிலையில் அவளது போஷாக்கான உணவினைப் பற்றியோ அவளது உடல்நிலை பற்றியோ யாரும் கவனத்திலெடுப்பதில்லை. சில தருணங்களில் அவள் வயிற்றுவலி மற்றும் உடல் வலியினைச் சகித்துக் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.

அத்தருணத்தில் அவளது குருதிப்போக்கு அதிகரிக்குமாயின் அவள் மயக்கநிலை, பதட்டம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு உளப்பாதிப்பினையும் உடற்பாதிப்பினையும் ஒருங்கே எதிர்கொள்கின்றாள். இந்தப் பாதிப்புக்கள் ஆண்பிள்ளைகள் எதிர்கொள்ளாதவை. அதனாத்தான் பெண்கள் பூப்பெய்தல் என்பது அவர்களுககு; ஆச்சரியத்தையும் ஆர்வத்தினையும் தூண்டுவதாயுள்ளது. பாலியற்கல்வியினை நாம் ஆரம்பக்கல்வி முதலே சொல்லிக் கொடுக்கத் தொடங்குவோமாயின் அவர்களும் பெண்களது இன்றியமையாமை உணர்ந்து அவர்களுக்கான மாண்பினைக் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். சில ஆண்கள் தமது தாய், சகோதரி, மனைவி மற்றும் ஏனைய பெண்களை மதித்து நடப்பதனை எங்கள் சமூகத்தில் காண்கின்றோம். அவர்களிடத்திலே பெண்களது உடல்நிலை, பெண்மை மற்றும் தாய்மை பற்றிய அறிதலும் புரிதலும் உள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இந்நிலை அனைத்து ஆண்களுக்கும் கிடைக்குமாயின் எமது நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பூச்சிய நிலைமையினை அண்மித்து விடும்.

இந்தக் காலத்திலே பெண்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட குடும்பமும் சமூகமும் பெண்களை அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட நாட்கள் வரை ஆலயங்களுக்குள் பிரவேசிகக் முடியாது. நற்காரியங்களில் அவர்கள் ஈடுபட தடை விதிக்கப்படும் அது மட்டுமல்ல சில தொழில்களில்கூட மாதவிடாய்க்காலங்களில் அவர்கள் ஈடுபட முடியாது. குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு இங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனால் பல பெண்களைத் தலைமையாகக் கொண்டு வாழும் குடும்பங்கள் மாதாந்தம் தொழிலினை இழப்பதனால் பொருளாதாரச் சிக்கல்களை அனுபவிக்கின்றனர்.

சில பாடசாலைகளில் மாணவியர் தமது மாதவிடாய்க்காலங்களில் உரிய மலசல கூட வசதிகளின்றி துன்பப்படுகின்றனர்.  அதிலும் கொடூரம் அவர்கள் தமது நாப்கின்களை மாற்றாது சகித்துக்கொள்வதனால் தொற்றுக்கள் எற்பட்டு அடுத்த சில நாட்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியாமலிருப்பதும் இவ்வாறு மாதாந்தம் துன்பங்ளை அனுபவிப்பதனால் அவர்களது கற்றல் மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதும் ஒவ்வொரு மாணவிக்கும் வழக்கமாகி விட்டது. எமது நாட்டில் இன்றுவரை வெறும்  30 வதீமான பெண்களே மாதவிடாய் நாப்கின்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எனையவர்களின் மாதவிடாய்க்காலங்களில் நாம் எவ்வாறான முக்கியத்துவத்தினைக் கொடுக்கின்றோம் என்று பார்க்க வேண்டியுள்ளது.

அலுவலகங்களில், வர்த்தக நிலையங்களில் மற்றும் தொழிற்தளங்களில் பலபெண்கள் மாதவிடாய்க்காலங்களில் தொடர்ந்து நின்று கொண்டே பணியாற்றுவதனையும் அக்காலங்களிற்கூட பெண்களது நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளாது முகாமைத்துவம் இடைவிடாது வேலை வாங்குவதனையும் நாளாந்தம் காண முடிகின்றது. உண்மையில் இந்தியாவின் சோமேற்றோ (Zomato) என்ற  நிறுவனம் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் ஆண்டுக்கு பத்து நாட்கள் மாதவிடாய்க் கால விடுமுறையினை வழங்கி முன்னோடியாக செயற்பட முன்வந்துள்ளது. இத்தகைய நிலைமை எமது நாட்டிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களால் முன்னோடியாக முன்னெடுக்கப்படுமாயின் எமது பெண்களும் நன்மை பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பாடசாலைகளில் அரசாசர்பற்ற நிறுவனங்கள் பெண்பிள்ளைகள் படும்பாட்டினைக் கவனத்திற் கொண்டு அவர்களுக்குத் தேவையான மலசலகூடங்களையும் நாப்கின்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளமையினைக் கல்விச்சமூகம் இன்றும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதனைக் காணமுடிகின்றது. அதேபோன்று சில மருத்துவபீட மாணவியர்கள் இணைந்து மாதவிடாயின் முக்கியத்துவம் மற்றும் சுகாதார நிலமைகள் பற்றி விழிப்புணர்வுகள் வழங்குவதனையும் காணமுடிகின்றது.

எது எவ்வாறாயினும் பெண்களின் ஆளுமைகளை நலிவுறச் செய்யக்கூடிய இத்தகைய இயற்கையான விடயங்களைக் கவனத்திற்கொண்டு உரிய கொள்கைகளினை பொருத்தமான வல்லுனர்களைக் கொண்டு வகுப்பது, சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவினைப் பெற்று பரவலான விழிப்புணர்வுகளையும் திட்ட முயற்சிகளினையும் முன்னெடுப்பது குறிப்பாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகளை மையப்படுத்தி அனுஷ்டிக்கப்படும் 16 நாட்கள் செயற்பாட்டுவாத நாட்களின்போது இந்த விடயத்தை தொனிப்பொருளாக வைத்து நாடு முழுவதும் நிகழ்வுகளின்வழி மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, பேசவெட்கப்படும் இவ்விடயத்தை அனைவரும் துணிந்து பேசமுன்வருவது, ஊடக பிரசாரம் மூலம் செயற்படல், என இன்னோரன்ன விடயங்களை, எமது நாட்டில் முன்னெடுப்பது மிக முக்கியமான தேவையாக மாறிவிட்டது. அதற்காக எமது நாடு செயறபட இன மத மொழி பேதமின்றி அனைவரும் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே மாதவிடாய்ச் சக்கரம் பெண்களுக்குமாத்திரம் உரித்தானது அதனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிடாமல் பெண்களுக்கு அக்காலப்பகுதியிலாவது உதவிகளைப் புரியவும், அதிக வேலைப்பளுகளைக் குறைக்கவும், மன உழச்சல், போன்றவற்றை கொடுக்காமலிருக்கவும். பாடசாலைகளில் முறையான மலசலகூட வசதிகள், நப்பின்களை மாற்றுவதற்குத் தகுந்த இடவசதிகள், போன்வற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கவும், சம்மந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்பதுவே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். இது நடைபெறவேண்டும்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் கடந்த வருடம்  டிசம்பரில்  ‘கண்ணியமான மாதவிடாய் குறித்த 7-வது சர்வதேச தினத்தை’ முன்னிட்டு நடைபெற்ற கண்ணியமான மாதவிடாய் தொடர்பான மூன்று நாள் சர்வதேசக் கருத்தரங்கில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் சுஷிலா கார்க்கி  மாதவிடாய் என்பது மிகவும் இயல்பான மற்றும் உயிரியல் ரீதியான ஒரு செயல்முறை என்றும், அது கண்ணியத்திற்குரிய ஒரு நிலை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது மௌனம், களங்கம், கூச்சம், அவமானம் மற்றும் பாகுபாட்டிற்கான ஒரு கருவியாக அல்லது வழியாக மாறியுள்ளது.  எனவே மாதவிடாய் காலத்தை எதிர்கொள்ளும் அனைவரின் கண்ணியத்தையும் காக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை எப்போதும் நினைவில் கொள்வோம்.