Zürich கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்

Zürich கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் கவலைக்கிடம்

Zürich நகரின் Kreis 5, Hafnerstrasse பகுதியில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கடுமையான கட்டுமான விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்தின் வெளிப்புற சாரத்தில் பொருத்தப்பட்டிருந்த கட்டுமான லிப்டில் இரண்டு தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

இதுவரை தெரியாத காரணத்தால் அந்த லிப்ட் பல மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த Zürich நகரப் பொலிஸார் இருவரையும் மீட்டு முதலுதவி வழங்கினர். தொடர்ந்து Schutz & Rettung Zürich குழுவினர் உயிர் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஒருவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு தொழிலாளர் கடுமையான காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருவரின் அடையாளங்களும் இன்னும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை.

விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து Stadtpolizei Zürich மற்றும் சம்பந்தப்பட்ட Staatsanwaltschaft இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

தகவல் மூலம்: Stadtpolizei Zürich