கர்ப்பகாலத்தில் Paracetamol: புதிய ஆய்வு கூறுவது என்ன?

கர்ப்பகாலத்தில் காய்ச்சல் மற்றும் வலிக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் Paracetamol குறித்து டென்மார்க்கில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் மருந்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு கூறவில்லை.

COPANA எனப்படும் இந்த ஆய்வில் 302 பெண் குழந்தைகள், பிறந்து சுமார் மூன்று மாதங்களானபோது பரிசோதிக்கப்பட்டனர். கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் தெரிவித்த Paracetamol பயன்பாடு மற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு குழந்தைகளின் கருவிலிருந்த மருந்து வெளிப்பாடு மதிப்பிடப்பட்டது.

Paracetamol பயன்படுத்திய தாய்மார்களின் குழந்தைகளில், சராசரியாகச் சிறிய கருப்பைகள், குறைவான கருப்பை முட்டை நுண்ணறைகள், சிறிய கருப்பை அளவு மற்றும் சில இனப்பெருக்க ஹோர்மோன்களில் வேறுபாடுகள் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுடன் வெளியிடப்பட்ட நிபுணர் மதிப்புரையின்படி, கர்ப்பத்தின் ஆரம்பக் காலத்தில் குறைந்த அல்லது மிதமான அளவு Paracetamol-க்கு வெளிப்பட்ட குழந்தைகளில் கருப்பை அளவு சுமார் 40 சதவீதமும், நுண்ணறைகளின் எண்ணிக்கை சுமார் 23 சதவீதமும் குறைவாகக் காணப்பட்டன. ஆனால் இவை குழுக்களுக்கிடையிலான சராசரி வேறுபாடுகளே தவிர, ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படும் விளைவு அல்ல.

இது ஓர் அவதானிப்பு ஆய்வு என்பதால், இந்த மாற்றங்களுக்கு Paracetamol தான் நேரடிக் காரணம் என்பதை நிரூபிக்கவில்லை. தாயின் காய்ச்சல், வலிக்கான அடிப்படைக் காரணம், வேறு மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற காரணிகளும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

குழந்தைப் பருவத்தில் கண்டறியப்பட்ட இந்த வேறுபாடுகள், எதிர்காலத்தில் கருத்தரிக்கும் திறனைக் குறைக்குமா அல்லது மாதவிடாய் நிற்கும் வயதை முன்கூட்டியே கொண்டுவருமா என்பதும் தெரியவில்லை. இதனை அறிய, ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய ஐரோப்பிய மருந்து வழிகாட்டுதலின்படி, தேவையானபோது கர்ப்பகாலத்தில் Paracetamol பயன்படுத்தலாம். முடிந்தவரை குறைந்த பயனுள்ள அளவில், தேவையான குறுகிய காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் புதிய ஆய்வால் அதிகாரப்பூர்வ பரிந்துரை இதுவரை மாற்றப்படவில்லை.

சிகிச்சையளிக்கப்படாத அதிக காய்ச்சல் அல்லது கடுமையான வலியும் தாய்க்கும் கருவிலுள்ள குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்பிணிகள் பயத்தால் Paracetamol-ஐ திடீரெனத் தவிர்ப்பதோ, மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையைத் தாங்களாக நிறுத்துவதோ கூடாது.

அடிக்கடி மருந்து தேவைப்பட்டால், அதிக அளவு பயன்படுத்த வேண்டியிருந்தால் அல்லது காய்ச்சலும் வலியும் தொடர்ந்தால் மருத்துவர் அல்லது மருந்தாளரை அணுகுவது அவசியம். வேறு வலிநிவாரண மருந்துக்கு தாங்களாக மாறவும் கூடாது.