(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் நேற்று முன்தினம் வீசிய மினி சூறாவளி காரணமாக வொலிவேரியன் பிரதேச சாய்ந்தமருது 09 ஆம் பிரிவில் 15 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன் அதில் 06 வீடுகள் பொதுமக்கள் பாவிக்க முடியாத அளவு முற்றாக கூரைகள் அகற்றப்பட்டும் கூரைகள் உடைந்து நொறுங்கி காணப்படுவதுடன் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவில் தச்சுத் தொழிற்சாலை உட்பட 07 வீடுகள் உள்ளடங்களாக சாய்ந்தமருது 17 ஆம் பிரிவு, சாய்ந்தமருது 03 ஆம் பிரிவு என சாய்ந்தமருதில் பரவலான இடங்கள் இந்த மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் இருந்த அனைத்து மின்சார உபகரணங்களும் பாவிக்க முடியாதவாறு செயலிழந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உடன் விஜயம் செய்து கள நிலவரங்களைப் பார்வையிட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி விடயங்களை எத்தி வைத்து இதற்கான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் களவிஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். இதற்கான முன்னெடுப்புகளை மழை என்றும் பாராது சாய்ந்தமருது 09 ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் எல். நாஸர் மற்றும் வொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசல் செயலாளர் என்.எம். சஜான் ஆகியோர் களத்தில் நின்று தகவல்களைத் திரட்டினார்.
உடன் நடவடிக்கை மேற்கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் திரட்டும் விண்ணப்பப் படிவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
இதேவேளை வொலிவேரியன் பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திலும் இந்த மினி சூறாவளி காரணமாக ஓடுகள் உடைந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப் தெரிவித்தார்.
இதன் காரணமாக மாணவர்கள் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து மழை, காற்று நீடிக்குமானால் மேலும் மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் இப்பிரதேசத்தில் நிலவுகின்றது. எனவே, இதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிரமமின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள குடியமர்த்தப்பட்ட மக்களே இந்த வொலிவேரியன் கிராம மக்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


