ஹஸ்பர் ஏ.எச்-
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ மற்றும் சமூகப் பொருளாதார வலுவூட்டல் நிகழ்வு நேற்று (07.09.2026)மாலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஊடாக புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் கட்டிடத்தில் இடம்பெற்றது.
மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல், அவர்களின் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் வளவாளராக தம்பலகாமம்- பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜி.எம்.ஹஸ்மி கலந்து கொண்டார்.
இதன்போது மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு, தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வது, குழு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சமூகப் பொருளாதார வாய்ப்புகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மாற்றுத் திறனாளிகளை சமூகத்தின் சமமான பங்காளிகளாக முன்னிறுத்துவதற்கும், அவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான வலுவூட்டல் நிகழ்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என தெரிவிக்கப்பட்டது.


