எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை முன்னிட்டு ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (08) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பான முறையில் பன்முகப்படுத்தி முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
பிரதமரின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதமரின் ஊடகச் செயலாளர் ஸ்ரீ பகவான் விஜிதா பஸ்நாயக்க, உயர்மட்ட அரச அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி மற்றும் திறமைகளைப் பாராட்டி, அவர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, உள்ளடக்கமான கல்விச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.


