_சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_
*திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சூட்சும ஆசியில் உருவான *ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீட ஆலயத்தின் ஏககுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம்* எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.05-10.30 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
முதல் நாள் 12 ஆம் திகதி எண்ணெய்க் காப்பு சாத்துதல் இடம்பெறும்.
இருபத்து நான்கு ஆண்டுகால பக்தர்களின் உழைப்பும், சித்தரின் வழிகாட்டலும் ஒன்றிணைந்து உருவான இப்புண்ணிய ஆலயம், இன்று திருகோணமலை மக்களின் ஆன்மீக தாகத்தை தீர்கும் புனித தலமாக திகழ்கிறது.
*ஆலய வரலாறு: காட்டில் தொடங்கிய யோகம்*
இந்த ஆலயத்தின் அடித்தளம் கண்டி மாவட்டம் பல்கேலக என்ற சிறு கிராமத்தில் போடப்பட்டது. அங்கு பிறந்த *காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள்* சிறு வயதிலேயே ஆன்மீக தாகம் கொண்டு இந்தியா சென்றார். அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்த சுவாமிகளை *அகஸ்திய மாமுனிவர்* ஆட்கொண்டார்.
அகஸ்தியர் ஆச்சிரமத்தில் கடும் தவம் புரிந்த சுவாமிகள், அவரின் பிரதான சீடரான *கண்ணையா யோகி மகரிஷியை* குருவாக ஏற்று, காயத்ரி உபாசனையில் சித்தி பெற்று *”காயத்ரி சித்தர்”* ஆனார்.
*இலங்கையில் காயத்ரி ஜோதி*
இலங்கை திரும்பிய சுவாமிகள், “சகலரும் காயத்ரி மந்திரம் ஓதி உயர்நிலை அடைய வேண்டும்” என்ற உயர் நோக்குடன் செயற்பட்டார்.
நுவரெலியாவில் *காயத்ரி பீடம்*, மட்டக்களப்பில் *காயத்ரி வளாகம்*, தம்பிலுவிலில் *காயத்ரி தபோவனம்* ஆகியவற்றை நிறுவிய பின்னர், சிவபூமியான திருகோணமலை கன்னியாவில் *”ஆத்மயோக ஞான சபா”* பீடத்தை நிறுவ முடிவு செய்தார்.
2001 ஆம் ஆண்டு ஆலயப்பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட வேளையில், *திரு. சண்முகராசா உடையார்* அவர்கள் தனது 5 ஏக்கர் காணியை தானமாக வழங்கினார். ஊர் மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமின்றி ஒன்றிணைந்து அக்காணியை துப்பரவு செய்து பணியை ஆரம்பித்தனர்.
*சூட்சும வழிகாட்டலில் உருவான ஆலயம்*
சுவாமிகள் நேரில் வருகை தராவிட்டாலும், தியானத்தின் மூலம் காணியின் அமைப்பை உணர்ந்து, கையடக்கத் தொலைபேசி மூலமாக ஆலயத்தின் வடிவமைப்பு, அளவுகள், ஆகம விதிகள் அனைத்தையும் வழிகாட்டினார். அதன் அடிப்படையில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அரச அனுமதியுடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நிதிப்பற்றாக்குறை இருந்தும், பக்தர்களின் உழைப்பும் சுவாமிகளின் ஆசியும் கைகொடுக்க, ஆலயத்திற்கான கொங்கிறீட் வீதியை அரசாங்கமே அமைத்து கொடுத்தது ஒரு அதிசயமாக அமைந்தது.
*சிவலிங்க பிரதிஷ்டை: நர்மதையின் அதிசயம்*
சுவாமிகள் சமாதி ஆவதற்கு முன்னர், “திருகோணமலை சிவபூமி. எனவே இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்” என ஆசீர்வதித்தார்.
அதன்படி, *சிவபால யோகியாரின்* கடும் தவத்தினால் நர்மதா நதிக்கரையில் தோன்றிய இரண்டு *உயிர் லிங்கங்களில்* ஒன்று இங்கும், மற்றையது நுவரெலியா *லங்காதீஸ்வரர் ஆலயத்திலும்* பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விரண்டு லிங்கங்களையும் சுவாமிகளும் சிவபால யோகியாரும் இணைந்து பிரதிஷ்டை செய்தமை குறிப்பிடத்தக்கது.
“யான் இறுதியில் திருகோணமலையிலேயே இருப்பேன். சூட்சும வடிவில் அனைவரையும் ஆசீர்வதிப்பேன்” என்ற சுவாமிகளின் வாக்கு 2010 ஆம் ஆண்டு நடந்த முதல் கும்பாபிஷேக எண்ணெய்க் காப்பு நிகழ்வின் போது நிறைவேறியது. அன்று அந்த லிங்கத்தினுள் இருந்து சுவாமிகள் தோன்றி பக்தர்களை ஆசீர்வதித்ததை பலரும் கண்கூடாக கண்டனர். இன்றும் அந்த லிங்கப் பெருமானில் சுவாமிகளின் தரிசனம் கிடைப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.
*13ஆம் திகதி: மீண்டும் ஒரு புனிதம்*
இத்தகைய மகிமை பொருந்திய ஆலயத்தின் அடுத்த மகா கும்பாபிஷேகம் வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள், காயத்ரி ஹோமங்களுடன் நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சுவாமிகளின் அருளை பெறவுள்ளனர்.
“காயத்ரி ஜெபிப்போம். ஆத்ம ஞானம் பெறுவோம்” என்ற சுவாமிகளின் குரல் இன்றும் இப்பீடத்தில் எதிரொலிக்கிறது.
*வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா*
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்,
சிரேஸ்ட ஊடகவியலாளர், காரைதீவு.


