சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிশন தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், மாணவர்களின் வீதி நாடக நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

​இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு நாளானது “மக்கள், பூமி மற்றும் செழிப்பிற்கான எழுத்தறிவு” (Literacy for People, Planet and Prosperity) எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது.

​இவ்வூர்வலத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திரு. ஏ. நசீர் மற்றும் திரு. எஸ். சுஜனுதன், முன்பள்ளி பாடசாலைகளுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. எஸ். விவேகானந்தராஜா, வணிகக்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

​பேரணியின் போது மாணவர்கள் கல்வி மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். மேலும், மாணவர்களினால் கல்வியின் அவசியத்தை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி வலய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு பேரணியையும் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் சிறப்பித்தனர்.