மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 72 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற மட்டக்களப்பு – ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 72 வது வருடாந்த திருவிழா கடந்த 28.08.2026 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாட் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக இடம்பெற்று, இன்று (06.09.2026) திகதி கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா நிறைவு பெற்றது.

கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப பவனி பிற்பகல் 4 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்து, அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாலை 5 மணியளவில் கொடியேற்றம் இடம் பெற்று முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருவிழா நவநாட் திருப்பலிகள் நாளாந்தம் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற அன்னையின் திருத்தலத்தின் இவ்வாண்டிற்கான பாத யாத்திரையானது கடந்த 5ம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றைய யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடைந்திருந்தனர்.

அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலிகரும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயருமான பேரருட்தந்தை பீ.அன்டன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வழி நடாத்தலில் இன்று 06.09.2026 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 05 மணிக்கு முதல் திருபலியானது சிங்கள மொழியிலும் அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு அதிதிகள் வரவேற்புடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியானது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்னையின் திருச்சுரூப ஆசீருடன், கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டு பெருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார், மாவட்டத்தின் மூத்த குரு மரியதாஸ் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கோபாலபிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், பல்லாயிரக்கணக்கான இறை மக்கள் நாடு பூராகவும் இருந்து வருகை தந்து சிறப்பித்ததுடன், அன்னையின் ஆசீரை பெற்று சென்றமையும் குறிப்பிடத்தக்கது.