CHF 50,000 பணத்தை எடுக்க வந்த 18 வயது பெண் கையும் களவுமாக கைது!
Zürich நகரின் Kreis 9 பகுதியில் தொலைபேசி மோசடி முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 18 வயது பெண்ணை, பணத்தை எடுத்துச் செல்ல வந்தபோது பொலிஸார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 3 காலை, அடையாளம் தெரியாத ஒருவர் 82 வயது மூதாட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, வங்கியிலிருந்து பல பத்தாயிரம் பிராங்குகளை எடுக்குமாறு கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளார்.
சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அயலவர் ஒருவரின் உதவியுடன் மூதாட்டி Zürich நகர பொலிஸாரை தொடர்புகொண்டார்.
இதையடுத்து பொலிஸாரின் அறிவுறுத்தலின்படி CHF 50,000 பணம் தயாரிக்கப்பட்ட பை ஒன்றில் வைக்கப்பட்டது. அந்தப் பையை எடுத்துச் செல்ல வந்த 18 வயது பெண்ணை மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 18 வயது உக்ரைன் நாட்டுப் பெண் என Zürich நகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
⚠️ பொலிஸாரின் எச்சரிக்கை
“பொலிஸ் தொலைபேசி மூலம் ஒருபோதும் பணம் கேட்பதில்லை.” அறிமுகமில்லாதவர்களிடம் பணம் அல்லது நகைகளை ஒப்படைக்க வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் அழைப்பைத் துண்டித்து 117 என்ற பொலிஸ் அவசர எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


