மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும்: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் MP சாணக்கியன் வலியுறுத்தல்!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வெறுமனே கூட்டங்களில் பேசுவதோடு நின்றுவிடாமல், உடனடியாக நடைமுறைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (02.09.2026) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி, காணி விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு எட்டப்பட்ட தீர்மானங்கள்:

விளையாட்டு மைதான அபிவிருத்தி: பெரியகல்லாறு மற்றும் கோட்டைக்கல்லாறு மைதானங்களின் அபிவிருத்திக்கு அரசியல் தலையீடுகளே தடைகளாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இளைஞர்களின் நலன் கருதி, எதிர்வரும் வாரத்தில் பிரதேச சபை மற்றும் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து குறித்த மைதானங்களை சுத்தப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

கடற்றொழிலாளர் பாதுகாப்பு: கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவைப்படும் இடங்களில் ‘Beacon Light’ அமைப்பதற்குரிய பரிந்துரைகளை கடற்றொழில் அமைச்சிடம் உடனடியாகச் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை: களுதாவளை பகுதியில் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குறைந்த மின்னழுத்தப் (Low Voltage) பிரச்சினையை உடனடியாகப் பரிசோதித்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பெரியகல்லாறு குடிநீர் திட்டம்: பெரியகல்லாறு பகுதியில் நீர்க்குழாய் பொருத்தும் பணிகளுக்கு கல்முனை மாநகர சபையினால் ஏற்படும் தடைகளை நீக்கி, அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகவும், குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை திண்மக்கழிவு: வைத்தியசாலை வளாகத்தில் தேங்கும் திண்மக்கழிவுகளை அகற்ற, வைத்தியசாலை நிர்வாகம், பிரதேச சபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், “மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே நிலையான அபிவிருத்தியை சாத்தியமாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.