மட்டக்களப்பில் சர்வதேச தென்னை தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் விசேட நிகழ்வு இன்று (02) மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பி. உதயசந்திரன் தலைமையில் இடம் பெற்றுது.

சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் நாடளாவிய ரீதியில் 250 செவ்விளநீர் கிராமங்களை உருவாக்கும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மயிலம்பாவெளி பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

தென்னை விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், செவ்விளநீர் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், தென்னை வளங்களை முறையாகப் பயன்படுத்துதல், செவ்விளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல் மற்றும் தென்னை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட தென்னைச் செய்கையாளர்களுக்கு ஊக்குவிப்பு காசோலைகள், தென்னங்கன்றுகள் மற்றும் தென்னை பயிர்ச் செய்கைக்கான உரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன், உதவி பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன், தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட தென்னைப் பயிர்ச்செய்கை சபை அதிகாரிகள், தென்னை விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.