யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவசரநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச நிறுவனங்கள் இணைந்து விரைவாகச் செயல்படுவதற்கான ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கை பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டம் 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பிற்பகல், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறைச்சாலையில் தீ விபத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது வேறு அவசர சூழ்நிலை ஏற்படும் போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கிடையே பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அவசரநிலைகளுக்கு வேகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடவடிக்கை எடுப்பதுடன், கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி ஏற்பாடுகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒருங்கிணைந்த பொறிமுறைகள் எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, இந்தப் பொறிமுறையின் நோக்கம் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து செயற்பட வேண்டிய முறை குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ். இந்திரகுமார், யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எச். மாரப்பன உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை கடற்படை, இராணுவம், பொலிஸ், யாழ்ப்பாண பிரதேச செயலகம், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையை பார்வையிட்ட அமைச்சர்
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து அமைச்சர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று கைதிகளின் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
இதன்போது சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் விளக்கமறியல் சந்தேகநபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.


