இலங்கை ரயில்வே ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
பணிநேரத்தில் Facebook, WhatsApp, TikTok பயன்படுத்தத் தடை
இலங்கை ரயில்வே திணைக்களம், பணிநேரத்தில் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், ரயில்வே நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான அல்லது இரகசியத் தகவல்களை வெளியிடுவதற்கும் தடை விதித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, ரயில்வே ஊழியர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் Facebook, WhatsApp, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில அதிகாரிகள் பணிநேரத்தில் ரயில்வே நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரயில் கட்டுப்பாட்டு அறைகள், இயந்திரக் கட்டுப்பாட்டு அறைகள், பணிமனைகள் மற்றும் ஏனைய ரயில்வே வளாகங்களிலிருந்து ரயில்வே நடவடிக்கைகள், உள்ளகத் தீர்மானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்துவதால் பணியின்போது கவனச்சிதறல் ஏற்பட்டு, ரயில்வே சேவைகளின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும் என்பதும் இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் ரயில்வே சேவைகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயணிகளுக்கான சேவைத்தரத்தை உறுதிப்படுத்த முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை ஊடகங்களுக்கோ வெளித் தரப்பினருக்கோ வழங்குவதற்கு ரயில்வே பொது முகாமையாளர், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


