நீர்கொழும்பில் இளைஞர்களுடன் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு எம்.பிக்கள் நேரடி கலந்துரையாடல்

நீர்கொழும்பில் நடைபெற்ற “Voice to Policy Dialogue” நிகழ்வில் கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர்.

திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழு மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கல்வி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி, தொழில்முனைவு, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கும், கொள்கை ரீதியான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் இந்த நிகழ்வு முக்கிய தளமாக அமைந்தது.

நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவர்களான கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோருடன் கௌரவ சமிந்திராணி கிரியெல்ல, கௌரவ எஸ். எம். மரிக்கார், கௌரவ பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி. டி. சூரியபண்டார மற்றும் கௌரவ சம்பிக ஹெட்டியாரச்சி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதன்போது, இளைஞர்கள் முன்வைத்த பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்குள் கொண்டு செல்வதற்கும், சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை முறையாக ஆவணப்படுத்தி, அவற்றை மேலதிக பரிசீலனைக்காக சமர்ப்பிக்கும் வகையில் Youth Rapporteur ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு தடவை இடம்பெறும் கலந்துரையாடலாக மட்டுப்படுத்தப்படாமல், கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களின் தொடர்ச்சியான பங்கேற்பை உறுதி செய்யும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் குரல் கொள்கை உருவாக்கத்தில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்தை மேலும் திறந்தநிலையுடனும் மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான “Voice to Policy Dialogue” கலந்துரையாடல்கள் தனது முயற்சியின் ஊடாக நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.