மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ் வேண்டுகோளிற்கமைவாக, பெரியகல்லாறு பெரிய பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரின் ஒழுங்கமைப்பில் இந்தக் கலந்துரையாடல் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியகல்லாறு பகுதியில் எதிர்காலத்தில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வீதி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மக்களின் தேவைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறியும் நோக்கில் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், தங்களை தேசிய மக்கள் சக்தியின் ‘பிரஜா சக்தி’ உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் மற்றும் பட்டிருப்பு தொகுதி NPP அமைப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட குழுவொன்று கூட்டத்தில் கலந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, மதிவர்ணன் நிக்சன் தலைமையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த குழுவினர், மதுபோதையில் இருந்ததாகவும், கூட்டத்தின் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அங்கு கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலை குழப்பும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக நடத்தப்படும் அபிவிருத்திக் கலந்துரையாடல்கள் அரசியல் முரண்பாடுகளால் திசைதிருப்பப்படாமல், பொதுமக்களின் தேவைகள் தொடர்பாக திறந்த முறையில் நடைபெற வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


