இகிமிசன் ஏற்பாட்டில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மூன்று அரிய நூல்கள் ஞாயிறன்று வெளியீடு

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வரிசையில், ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மூன்று முக்கியமான நூல்கள் கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக, இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கின்றார்.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூன்று நூல்கள்; “நற்றமிழ் ஞாயிறு சுவாமி விபுலானந்தர்”
சைவப் புலவர். மு. சேமகரன் எழுதியது.
“பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பேரானந்தத் திருவமுது”
கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதியது.
“சிவ சிந்தனைகள்”
ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜி மகாராஜ் அவர்களால் எழுதப்பட்டது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் . ஜே. எஸ். அருள்ராஜ் , இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் எவ். பாரதி கென்னடி, (பணிப்பாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்),
பி. பாலஸ்ரீதரன், (இணைப்புச் செயலாளர், புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார பிரதியமைச்சு), கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி நிர்மலேஸ்வரி பிரசாந்த் மற்றும் கலாநிதி த. விவானந்தராஜா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை – மட்டக்களப்பு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் – காரைதீவு, தமிழ் சங்கம் – மட்டக்களப்பு, வணிகர் சங்கம் – மட்டக்களப்பு மற்றும் கண்ணகி கலை இலக்கியக் கூடல் – மட்டக்களப்பு றஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.