( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கதும் உலகம் பூராகவும் புகழ் பெற்று விளங்கும் யாத்திரிகர் ஸ்தலமாகவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விழாவாகவும் மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழாவுக்கு எதிர்பார்த்தது போன்று பல இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மரியன்னையின் ஆசீர் பெற்று சென்றுள்ளனர்.
இம்மாதம் 6ந் திகதி (06.08.) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞான்பிரகாசம் ஆண்டகையினால் இத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இடம்பெற்றது..
இதைத் தொடர்ந்து வழமைபோன்று ஒன்பது நாட்கள் மாலையில் திருச் செபமாலையுடன் இறை வழிபாடுகள் இடம்பெற்றன. ஒன்பதாவது நாள் மாலை நற்கருணை விழாவும் நற்கருணை பவனியும் இடம்பெற்றது.
மடு பெருவிழா அன்று சனிக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகிய பெருவிழா கூட்டுத் திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிமேதகு மல்கம் றஞ்சித் ஆண்டகைகளின் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் மேதகு யூட் நிசாந் சில்வா ஆண்டகையும் உட்பட அனுராதபுரம் மறைமாவட்ட மற்றும் மன்னார் மறைமாவட்டம் ஓய்வுநிலை ஆயர்கள் மேதகு நோபேட் அன்றாடி ஆண்டகை மேதகு இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகை ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இக் கூட்டுத்திருப்பலியானது தமிழ் சிங்களம் மற்றும் திருச்சபையின் தாய் மொழியாம் லத்தீன் மொழி ஆகிய மும்மொழிகளிலும் நடைபெற்றது.
திருப்பலி முடிவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தனது மறைமாவட்ட மக்களுக்கு மடுத்திருப்பதி;யில் வருடத்தில் இருமுறை வழங்கும் அப்போஸ்தலிக்க பரிபூரண ஆசீரை கூடியிருந்த மக்கள் யாவருக்கும் திருச்சபையின் தாய் மொழியாம் லத்தீன் மொழியில் வழங்கும் மரபுப்படி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இந்த பரிபூரண ஆசீரை இந்த விழாவில் கூடியிருந்த மக்களுக்கும் மன்னார் மறைமாவட்ட மக்களுக்கும் மற்றும் ஏனைய மறைமாவட்ட மக்களுக்கும் வழங்கினார்.
இது புனிதர்களினதும் எப்பொழுதும் கன்னியான கன்னி மரியாளின் பரிந்துரை வேண்டப்பட்டு பாவ மன்னிப்பும் பலன்தரும் வாழ்வும் வேண்டப்பட்ட ஆசீராக இது அமைந்திருந்தது.
இதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றதுடன் இதைத் தொடர்ந்து மடு அன்னையை நோக்கி இத்திருத்தளத்திலிருந்து புறப்படுவதற்கு முன் மடு அன்னையை நோக்கி பிரியாவிடைச் செபமும் இடம்பெற்றதுடன் திருச்சுரூப ஆசீரை கொழும்பு பேராயர் அதிமேதகு மல்கம் றஞ்சித் அண்டகையினால் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டு இப்பெருவிழா 9.30 மணியளவில் நிறைவு பெற்றது.
ஏற்கனவே எதிர்பார்த்ததுக்கு அமைவாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் அதாவது எட்டு இலட்சத்திற்கும் பத்து இலட்சத்திற்கும் இடைப்பட்ட பக்தர்கள் அருட்பணியாளர்கள் , துறவியர்கள் என இவ்விழாவில் கலந்து கொண்டு மரியன்னையின் ஆசீரைப் பெற்றுக் கொண்டனர்.
மன்னார் அரசாங்க அதிபரின் தலைமையில் இரு முறை நடைபெற்ற ஒழுங்கமைப்புத் தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த வகையில் வருகை தந்திருந்த பக்தர்களுக்கான சகல அத்தியாவசிய ஏற்பாடுகளும் திருப்திகரமாக இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


