தலைமன்னார் புனித லோறான்சியார் ஆலய விழா ஆயரின் கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பாக நடைபெற்றது.

( வாஸ் கூஞ்ஞ) 11.08.2026

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னோர்களால் நிர்மானிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றான புனித லோறான்சியார் வருடாந்த ஆலயத் திருவிழா தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் ஒழுங்கமைப்பிலும் தலைமையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த முதலாம் திகதி (01.08.2026) புனித லோறன்சியாரின் திருஉருவ கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழா ஒன்பது நாட்களும் நவநாட்கள் மாலையில் திருச்செபமாலையுடன் தொடர்ந்து நவநாள் திருப்பலிகளும் நடைபெற்றன.

இதில் ஒன்பதாவது நவநாள் அன்று நற்கருணை விழாவாக வங்காலை பங்குத் தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளாரின் மறையுரையும் இதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட மருதமடு சிறிய குருமட அதிபர் அருட்பணி கொடுதோர் அடிகளாரின் தலைமையில் திவ்விய நற்கருணை பவனியும் இறை ஆசீரும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஆவணி பத்தாம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி;ப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் தலைமன்னார் பங்கு தந்தை அருட்பணி மேரி பஸ்ரியான்- ஆயரின் செயலாளர் அருட்பணி அன்ரனி- ஓமந்தை பங்கு தந்தை அருட்பணி அமல்ராஜ் குரூஸ் மற்றும் கீழியன்குடியிருப்பு பங்கு தந்தை அருட்பணி ஜெயபாலன் ஆகிய அடிகளார்கள் இணைந்து புனித லோறான்சியாரின் பெருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்ட இத்திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனியும் ஆயரால் திருச்சுரூப ஆசீரும் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.