மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்.சரவணபவன் பங்கேற்புடன் இன்று (11) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

டெங்கு நோய் அதிகளவில் பரவும் 14 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இந்த உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் நோய் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, நீர் தேங்கக்கூடிய இடங்களை இல்லாதொழித்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உயர் அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகமான பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாகாண பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் , பொலிசார், மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

டெங்கு நோய்பரவலை கட்டுப்படுத்த வேண்டியது ஒவ்வொரு நபரினதும் பொறுப்பாகும்.