சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்படுபவர்களின் விபரங்களை முன்னதாகவே திரட்டும் மோசடிக்காரர்கள், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் ‘Hi’ என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.

எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.