“சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, பெரும் கடனாளிகளுக்கு வேறொரு நீதியா?” – அரச வங்கிகளின் பெருங்கடன்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி!

அரச வங்கிகளில் சிறு கடன்களைப் பெற்று தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும் சாதாரண பொதுமக்களின் சொத்துக்கள் உடனடியாகக் கைப்பற்றப்படும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்களைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பெரும் கடனாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இன்றைய (05.08.2026) பாராளுமன்ற அமர்வின்போதே இந்த முக்கிய விவாதம் முன்வைக்கப்பட்டது.

சிறு கடனாளிகளுக்குக் கெடுபிடி; பெரும் கடனாளிகளுக்குச் சலுகையா?
இது தொடர்பாகப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்,

“எமது நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் அரச வங்கியில் சிறிய கடன் பெற்று, தவணையைச் செலுத்தத் தவறினால் ‘பாரடே நிறைவேற்று அதிகாரம்’ (Parate Execution) மூலம் அவரது வீடு, வாகனம் மற்றும் வணிகச் சொத்துக்கள் உடனடியாகக் கைப்பற்றப்படுகின்றன.

ஆனால், மக்களின் சேமிப்புப் பணமான அரச வங்கிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாத செல்வாக்குமிக்க நபர்கள் மீது இந்தச் சட்டம் ஏன் சமமாகப் பயன்படுத்தப்படுவதில்லை? சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேறொரு நீதி என்ற நிலை இனியும் தொடர முடியாது,” எனச் சாடினார்.

வங்கிகளின் அறிக்கை கோரி அமைச்சுக்கு கோரிக்கை
அரச வங்கிகளின் நிதி இழப்புகளைத் தடுக்கும் நோக்கிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் பின்வரும் 5 பிரதான அரச வங்கிகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

இலங்கை வங்கி (BOC)

மக்கள் வங்கி (People’s Bank)

தேசிய சேமிப்பு வங்கி (NSB)

பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB)

அரச அடமான மற்றும் முதலீட்டு வங்கி (SMIB)

கோரப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

நிலுவையில் உள்ள 20 மிகப்பெரிய தவணைக் கடன் கணக்குகள்.

கடந்த 15 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 20 மிகப்பெரிய கடன்கள்.

கடனாளிகள்/நிறுவனங்களின் பெயர்கள், நிலுவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகள்.

ஈடாக வைக்கப்பட்ட பிணையங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய மதிப்பு.

தவறிழைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

முழுமையான அறிக்கையைத் தயாரிக்க கால அவகாசம் தேவைப்படின், குறைந்தது 3 மாதங்களுக்குள் மொத்தக் கணக்குகள் மற்றும் நிலுவைத் தொகைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தடையில்லை
முன்னர் எழுத்துமூல வினாக்கள் மூலம் இவ்வாறான கடனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய உறுப்பினர், அரச வங்கிகள் பொது அதிகாரசபைகள் என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இந்த விவரங்களை வெளியிடுவதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

மேலும், அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, அதை அதிக வட்டிக்கு விட்டு இலாபம் ஈட்டியும் கடனைத் திருப்பிக் கொடுக்காத அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக அண்மையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.