மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏகமனதாக தெரிவான ஐ.ம.சக்தியைச் சேர்ந்த M.T. தாஹீஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,தோப்பூரில் இது வரலாற்று வெற்றியுமாகும்_இம்ரான் எம்.பி . –

மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இன்று (03)ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தோப்பூர் வட்டார உறுப்பினர் கௌரவ எம்.டி. தாஹீஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபை வரலாற்றில் தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் தவிசாளராக தெரிவாகியுள்ளமை இதுவே முதன்முறையாகும், இதற்கு முன்னர் மர்ஹூம் ஹாஜா முஹைதீன் அவர்கள் எனது தந்தையின் காலத்தில் ஐ.தே.கட்சி சார்பில் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இது தோப்பூரின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும், தோப்பூர் மக்கள் என் தந்தை மீதும் என் மீதும் வைத்துள்ள அன்பிற்கும்,ஆதரவிற்கும் என்னால் பிரதியுபகாரமாக செய்யப்பட்ட ஒரு நன்றிக்கடனாக இதனை நான் கருதுகின்றேன்.

புதிய தவிசாளர் தாஹீஸ் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர், பல தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் ஊடாக மக்களுக்கு பல சேவைகள் செய்தவர், தற்பொழுது கிடைத்துள்ள பதவி மூலம் தனது சேவையினை முழு மூதூருக்கும் செய்வார் என நான் திடமாக நம்புகின்றேன்.

ஏற்கனவே எம்மால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய தாஹீஸ் அவர்களை தவிசாளராக தெரிவு செய்வதற்கு பூரண ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் ஐயா உட்பட தமிழரசுக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.S. தௌபீக் உட்பட அவர்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும், தேசிய காங்கிரசின் தலைவர் கௌரவ A.L.M. அதாவுல்லா அவர்களுக்கும் அவரது கட்சி உறுப்பினருக்கும் இந்த நேரத்தில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


Hasfar A Haleem BSW (Hons)