வடகிழக்குக்கு பாரிய திட்டங்களை முன்னெடுத்த எஸ்.எம்.குரூஸூக்கு மன்னாரில் மீனவர்களுக்கு துறைமுகம் அமைக்காத கவலை.

( வாஸ் கூஞ்ஞ) 03.08.2026

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு திட்டப்பணிப்பாளராக இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு உதவிபுரிந்த எஸ்.எம்.குரூஸ் அவர்களுக்கு மன்னாரில் மீனவ சமூகத்திற்கு ஒரு தலைசிறந்த துறைமுகத்தை நிர்மானித்துக் கொடுக்க முடியவில்லையே என்ற கவலை இன்றும் அவரின் மனதில் இருந்து வருகின்றது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

‘மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் யுத்தக்கால டையறிலிருந்து 1983-2009’ என்ற தலைப்பில் முன்னாள் அரசாங்க அதிபர் எஸ்.எம்.குரூஸ் வெளியிட்ட புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை (01.08.2026) மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஸ்தாபகருமான அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரான திரு.எஸ்.மரியதாசன் குரூஸ் அவர்கள் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் இவர் பல இக்கட்டான நிலையிலும் தனது பணியை மேற்கொண்டுள்ளார் என்பது இன்று (01.08.2026) அவரால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

‘யுத்தக்கால டையறி’ என்ற புத்தக வெளியிட்ட நோக்கமே 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை அவர் சந்தித்த துன்பங்கள் போல்; எதிர்காலத்தில் இவ்வாறான யுத்தம் நம் நாட்டில் ஏற்படக் கூடாது மக்கள் எதிர்காலத்தில் இவ்வாறான துன்பங்களுக்கும் உள்ளாகக் கூடாது ஒவ்வொருவரும் ஐக்கியமாக புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டே இந்நூலை அவர் வெளியீடு செய்துள்ளார்.

இவர் அரசாங்க அதிபராக மற்றும் பல்வேறு சேவை புரிந்துள்ளக் காலக்கட்டத்தில் சிறந்த தலைமைத்துவம் கொண்டவராக இருந்ததை நான் நேரில் கண்டு உணர்ந்துள்ளேன். எனக்கு இவரின் தலைமைத்துவத்தின் கீழ் பணிபுரிய சந்தர்ப்பம் கிடைக்காதபோதும் நான் 2015 ஆம் ஆண்டு மருதங்கேணி பிரதேச செயலாளராக இருந்தபொழுது இவர் இப்பகுதிக்கு பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக இங்கு வந்திருந்தார்.

இதில் முக்கியமான வேலைத் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கல். இந்த திட்டத்தில் நானும் இணைந்து பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வேளையில்தான் நான் இவரின் தலைமைத்துவப் பண்புகளையும் அவரின் பேச்சுவார்த்தை திறன் ஆகியவற்றை எனக்கு அறியக்கூடியதாக இருந்தது.

அங்கு கடற்தொழில் சங்கங்கள் பொது மக்களுடன் நீண்டநேர கலந்துரையாடல் பின் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் வெற்றிக் கொள்ளப்பட்டது. இதனால் யாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க காரணகத்தாவாக இருந்தவர் எஸ்.எம்.குரூஸ் அவர்கள்தான்.

இவரின் இந்த முயற்சியாலும் ஆதரவாலும் எனக்கு இது தொடர்பாக மேலும் அறிவு கிடைப்பதற்கு அவுஸ்ரேலியாவுக்கும் சென்றுவர சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் அந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எனக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆனால் இவ்வாறான பாரிய திட்டங்களை எல்லாம் மேற்கொண்டிருந்த இவருக்கு இன்றும் மனதில் பெரும் கவலை இருந்து கொண்டு இருக்கின்றது. அதாவது மன்னார் மாவட்டத்தில் ஒரு சிறந்த துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் பேசாலையில் மீனவ சமூகங்களின் ஒத்துழைப்புடன் இந்த துறைமுகத்தை பேசாலையில் அமைப்பதற்கான அவாக் கொண்டிருந்தார்.

இதனால் மன்னார் மற்றும் வடக்கு மாகாண மீனவ சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். தற்பொழுது மீனவ சமூகம் நவீன முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. நீண்டநாள் தங்கி மீன்பிடியில் ஈடுபடும் நிலைக்கு மீனவர்கள் தற்பொழுது தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாறான படகுகளை பாதுகாப்பதற்கு இங்கு சரியான துறைமுகங்கள் கிடையாது. இந்த கவலை இன்றும் அவருக்கு இருந்து வருகின்றது.

இவரின் தலைமைத்தும் சிறந்த பேச்சுத் திறன் தீர்மானங்கள் எடுக்கின்ற விடயத்தில் இவர் எங்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார். இவரின் புத்தகத்தை நோக்கும்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எங்களுக்காக செய்து முடித்துள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற நிலையில் இவர் மூலம் மன்னார் மாவட்டம் பல அபிவிருத்திகளைக் கண்டுள்ளது இதற்காக நான் இவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.