கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்க இஹல கோரளே, பஸ்பாகே கோரளே மற்றும் கங்கவட்ட கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு விசேடமாகத் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


