தமிழகம்-இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 292 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறை, இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளது.
இராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறைக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடற்கரை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையின் போது, காய்கறி மூடைகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 சாக்குகளில், தலா 2 கிலோ எடைக் கொண்ட 146 பொதிகளில் மொத்தம் 292 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த பொதிகள் புதுமடம் கடலோரப் பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது .


