(வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தலைவர்
பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர (கிழக்கு மாகாண ஆளுநர் ) பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர்
தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரதேச சபை தவிசாளர்கள்,
அனுபம மங்கள விக்கிரமாராச்சி
அரச அதிபர் ,
திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசம் சார்பில் கலந்துகொண்ட நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி உரையாற்றினார்.
01. சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் விவசாயிகளின் நலன்:
சிறுபோக நெல்லை உரிய விலையில் சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையைத் தவிசாளர் சுட்டிக்காட்டினார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்ற கடன்களை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால் வட்டி அதிகரிக்க நேரிடும் என்ற அச்சத்தினால், தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எனவே, விவசாயிகளின் நன்மை கருதி தனியார் இடங்களிலாவது அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அபிவிருத்தி குழு, நெல் கொள்முதலுக்காக இரண்டு இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நாவிதன்வெளி பிரதேசத்தில் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதி அளித்தது.
02. குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு:
நாவிதன்வெளி பிரதேசத்தில் குடிநீர் வசதிகள் பூரணமாக வழங்கப்படவில்லை என்பதையும், குறிப்பாக 16 கிலோமீட்டர் தூரத்திற்கான குடிநீர் விநியோகம் இன்னும் பூர்த்தி செய்யப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் முன்மொழிவாகச் சமர்ப்பித்தார்.
இதனையேற்றுக்கொண்ட அபிவிருத்தி குழு, இந்த ஆண்டு இறுதிக்குள் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மூலமாக சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 மில்லியன் ரூபாய் செலவிலான வேலைத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறு பணிப்புரை விடுத்தது.


