இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கேகாலை மற்றும் களுத்துறை மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்-

2026 ஜூலை 29 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத் துறைமற்றும் நீர்வழங்கல் அமைச்சர் (டாக்டர்) சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து கேகாலையில் அமைந்துள்ள ‘நந்தா கம’ மற்றும் களுத்துறையில் அமைந்துள்ள ‘ஜன அருண கம’ ஆகிய இரண்டு மாதிரிக் கிராமங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, இவ்விரு கிராமங்களிலும் உள்ள 48 பயனாளிக் குடும்பங்களுக்கு வீட்டு அலகுகள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள், அத்துடன் இரு மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம், இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கையெழுத்திடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதிரிக் கிராமமும், மாவட்ட வீடமைப்புக் குழுக்களால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக 24 வீட்டு அலகுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் குருநாகல் ஆகிய 18 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தற்போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் சுமார் 98.5 சதவீதமாக நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள ஐந்து மாதிரிக் கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.