மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை அதிபரை மாற்றக்கோரி தொடர் போராட்டம்

( வாஸ் கூஞ்ஞ) 22.07.2026

மன்னாரில் ஒரு பிரபலயமான பாடசாலையான அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் தற்பொழுது அதிபராக கடமையாற்றும் அதிபரை உடனடியாக மாற்றக்கோரி இப்பாடசாலை சமூகம் போராட்டத்தில் இரண்டாவது தடவையாக இறங்கியுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை (22.07) காலை 7 மணியளவில் இப்பாடசாலைக்கு முன்னால் ஆரம்பமாகி பின் மன்னார் கல்வி வலயம் வரை விஸ்தரிக்கப்பட்டது.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது
மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த ஓரிரு வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த நிலையிலே குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இப் பாடசாலையின் மாணவர்கள்- பாடசாலையின் பழைய மாணவர்கள்- பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்தே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவ்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக்கோரி ஏற்கனவே போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வாக்குறிதி வழங்கப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்படாமையாலேயே இந்த போராட்டத்தை தாங்கள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தனர்.

அத்துடன் தற்பொழுதுள்ள புதிய அதிபரை தொடர்ந்து வைத்திருப்பதால் தற்போது பல மாணவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து இடை விலகி பிரிதொரு பாடசாலைக்குச் சென்றுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு அதிகாரிகள் வருகை தந்து இவர்களின் வேண்டுகோளை கேட்காதிருந்தமையால் இவ்போராட்டம் மன்னார் கல்வி வலயம் வரைக்கும் விஸ்தரிக்கப்பட்டு தங்கள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அதிபரை உடன் மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக்கல்வி திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

.