இலங்கையின் பொது சுகாதாரச் சேவைக்கு 100 ஆண்டுகள் – ஜனாதிபதி தலைமையில் நூற்றாண்டு விழா

இலங்கையின் பொது சுகாதாரச் சேவையின் நூற்றாண்டு நிறைவு விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்காசியாவின் முதலாவது களச் சுகாதாரப் பிரிவாக 1926ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பொது சுகாதாரச் சேவை ஆரம்பமானது. தற்போது நாடு முழுவதும் 362க்கும் மேற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைக் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பாக இது வளர்ச்சியடைந்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH), குடும்ப நல உத்தியோகத்தர்கள் (PHM), பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட களப் பணியாளர்களே இந்தச் சேவையின் அடிப்படைச் சக்தியாகத் திகழ்கின்றனர். பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, நாட்டின் சுகாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த நூறு ஆண்டுகளாக நாட்டின் ஆரம்ப சுகாதாரச் சேவையின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 36 சமூக சுகாதாரத் தொழில்சார் குழுக்கள் கௌரவிக்கப்பட்டன.

நூற்றாண்டு நினைவு மலர், இலங்கையின் சமூக சுகாதாரச் சேவையின் எதிர்காலப் பயணத்தை விளக்கும் வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகளும் ஜனாதிபதி தலைமையில் வெளியிடப்பட்டன.

தாய் மற்றும் சிசு மரணங்களில் பாரிய வீழ்ச்சி

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையின் பொது சுகாதாரச் சேவையானது பெருமைமிக்க வரலாறு, நம்பிக்கையான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பொது சுகாதாரத் துறையின் தலையீடுகளால் தாய் மரணங்களின் எண்ணிக்கை 2,500இலிருந்து 25 வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு சுமார் 200ஆக இருந்த சிசு மரணங்கள் தற்போது ஐந்து முதல் ஆறு வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலேரியா காரணமாக ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்த நாட்டில், தற்போது அந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய ஒரு நாடு, உயர்தரமான சமூக சுகாதாரச் சேவையை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பதற்கு இலங்கை தனித்துவமான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், அண்மைக்கால தொற்றுநோய்கள் மற்றும் அனர்த்தங்களின்போது அவர்கள் வழங்கிய மகத்தான சேவையையும் நினைவுகூர்ந்தார்.

புதிய சுகாதாரச் சவால்கள்

நிகழ்வில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், கடந்தகால வெற்றிகளைத் தொடர்ந்து பேணுவது மட்டும் அடுத்த நூற்றாண்டுக்குப் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.

தொற்றாத நோய்களின் அதிகரிப்பு, முதியோர் சனத்தொகை உயர்வு, மனநலத் தேவைகள், காலநிலை மாற்ற அபாயங்கள் மற்றும் புதிய தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை மற்றும் மதுபானப் பயன்பாடு போன்ற காரணங்களால் தொற்றாத நோய்கள் அதிகரிக்கின்றன. இவை தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்லாது, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையவை என்றும் அவர் விளக்கினார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அபிவிருத்திப் பங்காளிகளும் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

“ஆரோக்கியா” திட்டத்தில் சமூக சுகாதாரத்திற்கு முன்னுரிமை

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உரையாற்றுகையில், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “ஆரோக்கியா” வேலைத்திட்டம், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சுகாதாரத் துறையை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான தொலைநோக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சமூக சுகாதாரத்திற்குப் போதுமான முதலீடு செய்யப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் காணப்பட்டாலும், “ஆரோக்கியா” திட்டத்தின் முதன்மையான வேலைத்திட்டமாக சமூக சுகாதாரம் அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இதன்மூலம் சுகாதாரக் கட்டமைப்பில் மாற்றம், சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் திறமையான பயன்பாடு உறுதிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரச அதிகாரிகள், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், சமூக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.