2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்களைக் கொண்ட விமானத் தொகுதியைக் கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய விமான நிறுவனமொன்றிடமிருந்து 20 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் சந்தேகநபர்களான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபர் தொடர்பாக, சர்வதேச பொலிஸான இன்டர்போல் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (20) அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளனர்.
இரு விசாரணை அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கும் விசாரணைகளுக்காகவே அதிகாரிகள் குழு அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன அண்மையில் பகிரங்கப் பிடியாணை ஒன்றைப் பிறப்பித்திருந்தார். சர்வதேச நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு அந்தப் பிடியாணை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சஷீந்திர ராஜபக்ஷவுக்கும் ஆங்கிலத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளரான டபிள்யூ.டி. நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தேகநபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்குகளைப் பரிசோதிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது பெறப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது மரணம் தொடர்பான விசாரணையும் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் தொடர்பான வழக்குகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


