COPE அறிக்கை, அர்ச்சுனா விவகாரம், தமிழ் அரசியல் ஒன்றிணைவு – பாராளுமன்றத்தில் சானக்கியனின் தெளிவான நிலைப்பாடு.

COPE அறிக்கையை அரசியல் ஆயுதமாக மாற்ற வேண்டாம் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் புதிய ஒன்றிணைவு குறித்து சில விடயங்களைத் தெளிவுபடுத்தியபோது. மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த சம்பவத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (21.07.2026) கோப் (COPE) குழு தொடர்பாகவும் சில முக்கியமான விடயங்களை முன்கொனர்ந்த போது .

கோப் குழுவால் அடையாளப்படுத்தப்படும் விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கோ அல்லது பொலிஸ்மா அதிபருக்கோ அனுப்புவதில் எங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஆனால், கோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தாண்டி, அதை விவாதித்து ஒருவரை நீதிமன்றத் தீர்ப்பின்றி குற்றவாளியாக சித்தரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமையால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, அரச அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது எந்த அடிப்படையில் நடைபெறுகிறது? எந்த அளவுகோலின் அடிப்படையில் சில குறிப்பிட்ட விடயங்கள் மட்டும் கோப் குழுவால் தெரிவு செய்யப்படுகின்றன?

நானும் கடந்த பாராளுமன்றத்தில் கோப் குழு உறுப்பினராக இருந்தேன். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் நிலுவைக் கடன் விபரங்களை இந்த சபையில் வெளிப்படுத்தியவன் நான்தான். ஆனால் இன்று மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி தொடர்பான முக்கிய விடயங்கள் ஏன் கோப் குழுவின் விவாதங்களில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுகிறது.

கடந்த கோப் குழுவின் தலைவர், குழுவின் முன்னிலையில் ஆஜரான அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். தற்போதைய குழு அவ்வாறு செயற்படுகிறது என்று நான் கூறவில்லை; சான்றுகளை அழிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், கோப் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரச நிறுவனங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து, விசாரணை நிறைவடைவதற்கு முன்பே தீர்ப்பளிக்கும் சூழல் உருவாகக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

இன்று சில மோசடிகள் தொடர்பாக உண்மையில் முறையான விசாரணைகள் நடைபெறுகின்றனவா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன என்று இந்த நாட்டின் ஜனாதிபதி பலமுறை கூறியுள்ளார். அது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோப் குழு அறிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு அனுப்புவதற்கு எங்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், அதனை அரசியல் விவாதமாக மாற்றி பாராளுமன்றத்தில் பேசுவதன் மூலம், தவறிழைக்காத அரச அதிகாரிகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கக் கூடாது. ஆகவே, இந்த விடயத்தில் மிகுந்த பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை வங்கி,மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய அரச வங்கிகளில் நிலுவை கடன்கள் ஊடாக பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது..இந்த விடயம் பற்றி அடுத்தக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.இது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த சம்பவத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மக்களின் பிரச்சினையை முன்வைக்கும் போது அவருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனா இராமநாதன் கதிரையில் அமர்ந்திருந்தபோது அமைச்சரே அவரது கையைப் பிடித்தார். அதற்கு முன்னர் அந்த அமைச்சர் அவரது இடுப்பைக் கிள்ளியதாகவும் கூறப்படுகிறது. அது வேறு விவாதம். இடுப்பைக் கிள்ளியது சரியா? அடிக்க முயன்றது சரியா? என்பது குறித்து நான் கருத்து கூறவில்லை. ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட்டத்திலிருந்து வெளியேற்ற எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.

இறுதியாக, தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் புதிய ஒன்றிணைவு குறித்து சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் மூன்று அடிப்படை விடயங்களை முன்னிலைப்படுத்தியே ஒன்றிணைந்து செயற்படுகிறோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது ஆகிய மூன்று முக்கிய இலக்குகளை அடைவதற்காகவே தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்த ஒன்றிணைவு குறித்து பல்வேறு கோணங்களில் தவறான தகவல்களும் போலியான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு கௌரவமான, நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது.

எங்களது முயற்சிகளை தவறாகப் புரிந்துகொள்வதும், தவறாகச் சித்தரிப்பதும் அரசாங்கத்திற்கு ஆதரவான சில தரப்புகளே. அவர்கள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், எங்களது இந்த புதிய ஒன்றிணைவு நிச்சயமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளையும், அவர்களின் எதிர்காலத்தையும் வலுப்படுத்தும் ஒன்றாகவே அமையும்.