எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நியமனம் பெற்று, ஏழரை ஆண்டுகளாக பிரதி ஆணையாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதையொட்டி, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (19) கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்களின் சிறந்த நிர்வாகத் திறன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி முன்னெடுத்த செயற்திட்டங்கள், கமநல சேவைகள் நிலையங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்புகள் என்பன நினைவுகூரப்பட்டன.
தொடர்ந்து, கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பாராட்டுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவரின் எதிர்காலப் பணிகளுக்கும் அனைவரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்கள், தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்திய சேவையை எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
உணர்வுபூர்வமான சூழலில் நிறைவடைந்த இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அவரின் சேவையைப் பாராட்டி, புதிய பணியிடத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
எதிர்வரும் தினங்களில் பிரதி ஆணையாளர் கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்கள் கொமரன் கடவளை பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கமநல சேவைகள் திணைக்களத்தின் பெரும்பாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பிரதி ஆணையாளரின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டினர்.
இதன்போது பெரும்பாக உத்தியோகத்தர்களின் உணர்வுபூர்வமான அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
மேலும், பிரதி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில், கமநல சேவைகள் நிலையங்களின் கீழ் உள்ள ஏராளமான குளங்கள் புனரமைக்கப்பட்டதுடன், விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


