மடு- மன்னார் பிரதேசப் பிரிவுகளில் 150 வீடுகளுக்கு மேற்பட்ட 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைத்தக் கொடுக்க இருக்கின்றோம் கடந்த அரசாங்கங்கள் அரை குறையாக விட்டுச் சென்ற வீட்டுத்திட்டங்களையும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறிய 71 குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாய் வீடமைப்பு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (16.07) மன்னார் செயலகத்தில் நடைபெற்றபோதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
யுத்ததக் காலத்தின்போது இப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து தற்பொழுது மீள்குடியேறி 17 வருடங்கள் கடந்தும் இக்காலத்திலும் நீங்கள் வீடுகள் அற்ற நிலையில் சொல்லொண்ணா துன்பங்களில் அனுபவித்து வருகின்றீர்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இன்று (16.07.2026) வீட்டுத் திட்டத்திற்கான நிதி உதவி வழங்கப்படுகிறது. இது மட்டுமல்ல வருகின்ற வருடம் அரசாங்கத்தின் சிறப்பான கொள்கைக்கு அமைவாக வீடுகள் அற்ற அனைவருக்கும் வீடுகள் என்ற கொள்கைக்கு இணங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேறியுள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றது.
இதற்காள எமது ஜனாதிபதி அனுர அவர்கள் வருகின்ற வருடம் நிதி ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் 6500 லிருந்து 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதைவிட 2028 ஆம் ஆண்டு இறுதிப் பகுதிக்குள்ளே 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள யாவருக்கும் முழுமையான வீடுகளை வழங்குவதற்கு கொள்ளையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் உப குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஊடாக வீட்டுத் திட்டங்களை வழங்க இருக்கின்றோம். கடந்த வருடங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக அதிகமான வீட்டுத் திட்டங்களை மன்னாருக்கு வழங்கி இருக்கின்றோம். இதைவிட அதிகமான வீடுகளை வழங்க இருக்கின்றோம்.
மேலும் டிட்வா சூறாவளி காரணமாக சேதம் அடைந்த வீடுகளுக்கு 5 இலட்சம் ரூபா தொடக்கம் 25 இலட்சம் ரூபா வழங்குவதுடன் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
குறிப்பாக மடு- மன்னார் பிரதேசப் பிரிவுகளில் 150 வீடுகளுக்கு மேற்பட்ட 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைத்தக் கொடுக்க இருக்கின்றோம். இத்துடன் மகளீர் சிறுவர் அமைச்சு மற்றும் சமூர்த்தி அமைச்சின் ஊடாகவும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட இருக்கின்றன.
ஆகவே அரசின் திட்டங்களுக்கு அமைவாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் வீடுகள் அற்ற யாவருக்கும் வீடுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்கள் அரை குறையாக விட்டுச் சென்ற வீட்டுத்திட்டங்களால் இன்றும் அந்த மக்கள் பல அசௌரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஆகவே தற்பொழுது வீட்டுத் திட்டத்திற்கான உதவிகளை பெறும் நீங்கள் அதிகாரிகளுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்கி விரைவில் உங்கள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். பகுதி பகுதிகளாக உங்கள் வீட்டுத் திட்டப் பணம் விடுவிக்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க- மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்- மன்னார் பிரதேச செயலாளர் கே. காந்தீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


