எல்நினோ தாக்கத்திலிருந்து விவசாயிகள் விடுபட மன்னாரில் விசேட கூட்டம்!

( வாஸ் கூஞ்ஞ) 16.07.2026

எதிர்காலத்தில் நிலவ இருப்பதாக எதிர்வு கூறப்படும் எல்நினோ காலநிலையால் மன்னார் விவசாயிகளுக்கு அறிவு புகட்டும் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதன்னிழமை (15.07) மாலை 3.30 மணியளவில் விஷேட விவசாயக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்ச.சிவசிறீ- மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்- மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு- முருங்கன் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.திவ்யா- உயிலங்குளம் விவசாயத் திணைக்களம் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.பிரியதர்சினி உட்பட பிரதேச செயலாளர்கள்- திணைக்களத் தலைவர்கள்- திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விவசாய அமைப்புக்களிலிருந்து வருகை தந்திருந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் தற்பொழுது எதிர்வுகூறப்படும் எல்நினோ காலநிலை மாற்றம் மன்னாரில் விவசாயத் துறையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதனை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்- வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளா ;ச.சிவசிறீ- மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்- மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு- முருங்கன் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.திவ்யா- உயிலங்குளம் விவசாயத் திணைக்களம் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.பிரியதர்சினி ஆகியோர் விவசாயிகளும் மக்களும் எதிர்கொள்ள இருக்கும் எல்நினோ தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடலாம் குறிப்பாக மன்னார் விவசாயிகள் பழமையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தங்கள் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளாது காலத்திற்கேற்றவாறு தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பலதரப்பட்ட விதத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் உயர்மட்டத்திலிருந்து தொடர்ந்து ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றுக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அவ்வப்போது விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என அரசாங்க அதிபரால் இங்கு தெரிவிக்கப்பட்டது.